கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் அஜ்மீர் க்வாஜா நாயகத்தை அழைத்தபோது

பலநாள் பயணத்துக்குப் பின்னர் ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்களும் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்களும் அண்ணலெங் கோமான் முஹம்மத் முஸ்தபா(ஸல்)அவர்களின் சன்னிதானத்தில் வந்து நின்றார்கள்.

மதினா நகர் இரவின் மடியில் உறங்கிக் கிடந்தது. பெருமானாரின் சன்னிதானத்தை ஒளிவெள்ளத்தால் நிறைத்துக் கொண்டிருந்தன.
குரு ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்கள் குனிந்து சிரம் பணிந்திட உடனே சீடர் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்களும் பணிவின் உயர்வாக தன் சிரம் பணிந்து மனம் உருகி ஸலாம் கூறி நின்றார்கள்.

“ஜீவனுள்ள சன்னிதானத்தில் மைந்தரே! நீர் என்னைப் பெரிதாகக் கருத வேண்டாம். கண்மணி நாயகம்(ஸல்)அவர்களையே கருதும்” என்று குருநாதர் அவர்கள் கூறி சற்று விலகினார்கள்.

ஆன்மீக சீடர் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்கள் குருநாதரவர்களுக்கு முன்னே இரண்டடி எடுத்து வைத்து மீண்டுமொருமுறை சிரம் பணிந்து சலாம் கூறினார்கள்.

சலனம் அடங்கிய அந்நிசிப் பொழுதில் கண்மணி நாயகம்(ஸல்)அவர்களின் ரவ்ழா ஷரீப் அருகில் ஒளியுருவமாய் கண்மணி நாயகம்(ஸல்)அவர்கள் காட்சிக் கொடுத்தார்கள். அவர்களின் அருட்காட்சியைக் கண்ட குருவும் சீடரும் ஓடோடி சென்று அவர்களின் திருவடிகளில் வீழ்ந்திட எண்ணியும் இதயமும் உடலும் செயலற்றுவிட்டவர்களாக நின்று விட்டார்கள்.

“வ அலைக்குமுஸ் ஸலாம் யா சுல்தானல் அவ்லியா ஹிந்துல் வலி!”
“வ அலைக்குமுஸ் ஸலாம் வலிமார்களின் அரசரே!
இந்திய நாட்டின் இறைநேசரே!”

நாயகம் ரசூல் கரீம்(ஸல்)அவர்களின் பதிலும் அந்தப் பதினூடே தமது சீடருக்களிக்கப் பெற்றிருக்கும் உயர் பதவியின் பிரஸ்தாபமும் குரு அவர்களுக்கு மெய்மறக்கச் செய்தது.

கண்மணி நாயகம்(ஸல்)அவர்கள் புன்னகை புரிந்தபடியே மறைந்து விட்டார்கள். ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்கள் தம் ஆத்ம மைந்தரை ஆரத் தழுவிக் கொண்டார்கள். தம் ஆத்ம மைந்தரின் பொருட்டால் தமக்கும் அருட்காட்சி கிடைத்தை எண்ணி அன்று அளவிட முடியாத பரவசத்துக்கு ஆளாகிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.