கௌதுகள் நாயகம் தங்கள் குருவிடமிருந்து கிலாபத்தை பெற்றுக்கொண்ட அதிசய நிகழ்வு

அன்று இரவு கான்கா கோலாகோலம் கொண்டிருந்தது. சீடர்கள், கலீபாக்கள், அந்நாட்டு அரசர்கள், பொதுமக்கள் புடை சூழ அமர்ந்த ஹழ்ரத் ஸெய்யதினா அபூ ஸய்யீது முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் அண்ணல் கௌஸுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரலி)அவர்களி தன் அருகிலமர்த்திக் கொண்டு அகமியமான சொற்பொழிவு நிகழத்தினார்கள். அருள்மறை வசனங்களுக்கு அவர்கள் அளித்த புதிய பொருள் விளக்கத்தை கேட்டு மக்கள் திகைப்பிலாழ்ந்தார்கள்.

ஹழ்ரத் அபூ ஸய்யீத் முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் தங்கள் அகமிய உரையை நிறைவு செய்து. கலீபாக்களையும், சீடர்களையும், பொதுமக்கள்களையும் சாட்சிகளாக அமரச் செய்து அண்ணல் அப்துல் காதிர் ஜீலானீ(ரலி)அவர்களுக்கு, தன் சிரசின் மீது பதினெட்டு முழ நீளமுள்ள பசுந்தலைப் பாகையொன்றை புதிதாக சுற்றி பின்னர் அதை கலையாமல் கையிலெடுத்து எதிரில் அமர்ந்திருந்த கௌஸுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்களின் புனித சிரசின் மீது வைத்தார்கள்.

அதன் பின் அண்ணலரை அன்போடு விளித்து “அப்துல் காதிரே குர்பே இலாஹி என்னும் இறை நெருக்கத்தை அடைந்து விட்ட உமக்கு கிர்காவையும், கிலாபத்தையும் இந்த அடியானின் கரங்களால் அளிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ்னைத்தும் உரித்தாகும் என்றார்கள்.

தன் முன் அமர்ந்திருந்த மகான் ஹழ்ரத் அபூ ஸய்யீத் முபாரக் மஃஜூமி(ரலி)அவர்களின் திருக்கரங்களை பற்றி முத்தமிடுவதற்காக குனிந்தார்கள் அண்ணலர். அண்ணலரின் இமைகள் மூடியிருந்தன. இதயம் ஏனோ ஒரு முறை நடுநடுங்கி பேரமைதியில் ஆழ்ந்தது. தன் எதிரே அல்லாஹ்வின் தூதர் ரசூலில்லாஹி(ஸல்)அவர்கள் அமர்ந்திருக்க கண்டார்கள்.

அண்ணலரின் நினைவுகள் சூக்கும வட்டத்திலிருந்து நனவுகில் மீண்டபோது ஹழ்ரத் அபூ ஸய்யீத் மஃஜூமி(ரலி)அவர்கள் வெண்கல குரல் அவர்களின் காதில் ஒலித்தது.

“இதோ இந்த கரம் இது என்னுடைய கரமன்று. இது மெய்யாகவே அர்ஷின் காவலர் ஹழ்ரத் செய்யதினா அலி(ரலி)அவர்களுடையதே. இதோ இந்த கோலம் இது என்னுடையதன்று இது எம்பெருமானார்(ஸல்)அவர்களுடையதே…

“இதோ இந்த தலைப் பாகையைக் கட்டும் உரிமையும் என்னுடைய உரிமையன்று. இதனை பெருமானார் (ஸல்)அவர்கள் தங்கள் புனித சிரசிலிருந்து கழற்றி தங்கள் ஆத்ம ஞானப் பிரதிநிகளில் முதல்வரான ஹழ்ரத் அலீ(ரலி)அவர்களின் சிரசில் கட்டுவித்து ‘அன மதீனத்துன் இல்மி வ அலீயுன் பாபுஹா-நான் ஞானத்தின் பட்டணமாவேன், அலீ அதன் தலைவாயிலாவார்’ என்று அறிவித்தார்கள்.

“இது ஹழ்ரத் அலீ(ரலி)அவர்களிலிருந்து கிலாபத்துக்குரிய பிரதிநிகளான இமாம் ஹழ்ரத் ஹுஸைன்(ரலி)அவர்கள், இமாம் ஜெய்னுலாபிதீன்(ரலி)அவர்கள், இமாம் ஹழ்ரத் முஹம்மத் பாக்கர்(ரலி)அவர்கள், இமாம் ஹழ்ரத் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள், ஹழ்ரத் ஷெய்கு ஸிர்ரியுஸ் ஸிக்தி(ரலி)அவர்கள், ஹழ்ரத் செய்யதினா ஜுனைதுல் பகுதாதி(ரலி)அவர்கள்…. என்ற வரிசையில் தொடர்ந்து ஷெய்குனா ஹழ்ரத் அபுல் ஹஸன் அலி குரைஷி(ரலி)அவர்களையடைந்து. சங்கைக்குரிய அந்த நாதாவின் திருக்கரங்களிலிருந்து கிலாபத்தை இந்த அடியான் பெற்றுக் கொண்டேன்.

இவ்வாறு மொழிந்த பின்னர் எலுமிச்சம் பழச்சாற்றில் கற்கண்டும், சுண்ணாம்பும் கரைத்து அத்துடன் பரிசுத்தமான இல்மே இலாஹி என்னும் அகமிய ரகசியத்தை அதில் கலந்து அண்ணல் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரலி)அவர்களின் வாயிலூட்டி “ஷராபன் தகூரா என்ற இந்த மதுர பானம் உம்முடைய இதயத்தை தெளிவாக்க போதுமானது” என்றார்கள். பின்னர் அங்கு மௌனம் நிலவவியது.

மௌனித்திருந்த மக்கள் அனைவரும் அண்ணலரின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாக அவர்களின் பார்வை தங்கள் மீது சற்றேனும் திரும்பாதா என்று ஆர்வம் மேலிட்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.