சம்பூர்ணமான முஹம்மது முஸ்தபா (ஸல்)

உலகத்திலுள்ள மதங்களனைத்திலும் மெய்ஞ்ஞானமிருந்தும் இஸ்லாத்தினுடைய ஞானம் மட்டும் தனித்தன்மை வாய்ந்தது என்று நாம் கூறுவதன் தாத்பர்யம் யாது?
முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே சம்பூர்ணமானவர்கள் என்று நாம் வாதிடுவதன் அர்த்தம் என்ன?

ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) ஆண்டகைக்கு அவர்களின் குருநாதர் ஹஜ்ரத் உதுமான் ஹாரூனி (ரலி) அவர்கள் அளித்த விளக்கம்!

முயினுத்தீனே வானத்தைப் பாரும், அதோ அந்த சம்பூர்ணச் சந்திரன் மாதத்துக்கு ஒருமுறைதான் வானில் தோன்றுகிறது,எனினும் பிறை பிறந்த நாள் முதல் கடந்த பதினான்கு நாட்களிலும் வானில் வந்துகொண்டிருந்த நிலவு வேறு நிலவா?

வேறு நிலவல்ல! இதே நிலவுதான்! அதுபோலத்தான் சம்பூர்ண ஞான அம்சமாகத் தோன்றிய ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு முன்னர் அவதரித்த நபிமார்கள் அனைவரும் ஹஜ்ரத் அவர்களின் ஜோதிச்சுடரே ஆவார்கள்,

அதேபோன்று ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களுக்குப் பின்னர் பிரபஞ்ச முடிவு காலம் வரை தோன்றக் கூடிய ஒலிமார்கள் அனைவரும் அவர்களுடைய அவர்களுடைய ஜோதிச்சுடர்களே ஆவார்கள்,

இதைக் குறிப்பிட்டு “முன்னவரும் பின்னவரும் நாமே” என்னும் ஹதீஸ் ஒன்றும் இருக்கக் காண்கிறோம்,
ஹஜ்ரத் (ஸல்) அவர்களுடைய சம்பூர்ணம் என்பது உலகத்தின் வரலாற்றில் அவர்களுடைய பிறப்பு என்னும் காலகட்டம் என்று ஆகாது,
உண்மையில் இறைவன் அவர்களைச் சிருஷ்டித்துத் தன்னுடைய உள்ளமையில் தரிசித்த நேரமே அவர்களுடைய சம்பூர்ண நிலை என்பதாகும்,

ஹஜ்ரத் (ஸல்) அவர்களின் உலக அவதாரம் சம்பூர்ணத்தின் பிரதிபலிப்பாகும், உண்மையில் அவர்களுடைய இதய ஸ்தானமே இறைவன் தன்னில் தானே முழுமையாக தஜல்லியான ஸ்தானமாகும்,
“இருப்பவன்” முஹம்மதுடைய இதயத்தில் தன்னை முழுமையாகத் தரிசித்துக் கொண்டான்,

எனவே தான் ஹஜ்ரத் (ஸல்) அவர்களை சம்பூர்ணமானவர்கள் என்றும், அவர்களிலிருந்து வெளியான ஞானத்தைத் தனித்தன்மையானதென்றும் கூறுகிறோம்

Leave a Reply

Your email address will not be published.