தமிழகத்தில் காதிரியா தரீக்கா

thamizhagathil kaadhiria thareeka

தமிழகத்தை பொருத்தவரை நாகூரில் அடங்கியுள்ள ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் சுற்றிவந்து தீனுல் இஸ்லாத்தையும் காதிரியா ஞானவழியையும் தழைக்கச் செய்தார்கள். தமிழகத்தின் நாளாதிசைகளிலும் நடந்து சுற்றிவந்து மக்களுக்கு ஞான தீட்சை அளித்தார்கள்.
காயல்பதியில் காமில் சுலைமான் காதிரி, கோட்டைபட்டினம் இராவுத்தர் அப்பா, திருமங்களம் மௌலா அபுபக்கர் ஒலியுல்லா ஆகியோர் பிரபலமடைந்தனர். கீழக்கரையில் அடக்கமாகியுள்ள நாயக நேசர் சதக்கத்துல்லா காதிரி அவர்கள் இயற்றிய ‘யா குத்பா’ பாமாலைதான் இன்றும் உலகின் பலபகுதிகளிலும் பக்தியுடன் ஓதப்பட்டு வருகிறது.
மகான் ஸதக்கத்துல்லா அவர்களின் சீடர்களான ஷெய்கு மஹ்மூது தீபி அவர்கள் ஆண்டகையின் மீது முஹ்யித்தீன் மௌலீது ஷரீஃபும், நுாஹூ லெப்பை ஆலிம் ‘வேதப்புராணம்’ என்ற ஞான நுாலையும் ஆக்கியுள்ளனர். புகாராவிலிருந்து கேரளம் மஞ்சேரிக்கு வந்த மகான் மஹ்துாம் ஜகான்கஸ்த் கேரளாவிலும் மற்றும் கடையநல்லுார், மதுரை நகரங்களிலும், பின்னர் திருவாரூரில் தங்கியும் காதிரியா தரீக்காவை பரப்பினார்கள்.
மகான் ஸதக்கத்துல்லாவின் பேரர் உமர் ஒலியுல்லா பாடிய கஸீதாவில் ‘இலாஹி அன்த துல்ஜூதி.. இறைவா நீ கொடைவள்ளல், தாஹா நபி அவர்கள் கொடையின் ஊற்று, முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களோ உன்னை நாடிவரும் நேசர்களுக்கு ஜூதி மலையைப் போன்றவர்கள்’ என்று பாடியுள்ளார்கள்.
காயல்பட்டினத்தில் இன்றும் நின்றிலங்கும் மஹலரா காதிரியா தரீக்காவின் அற்புத சின்னமாக விளங்குகிறது. அங்கும் மேலப்பாளையத்திலும் ஆண்டகையின் வழித்தோன்றல்களான ஸாதாத்துகள் பலரும் குடியேறி திருமணம் புரிந்து சந்ததிகளை ஈன்று காதிரியா ஞான வழியையும் பரவச்செய்துள்ளனர். இப்பகுதிகளில் ஆண்டகையின் சந்ததியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.