திருவண்ணாமலையார் கோவிலில் மெய்ஞானம் போதித்த நாகூர் ஆண்டகையின் பேரர் – காட்டு பாபா பக்ருதீன் (ரலி)

தஞ்சை அரசர் அச்சுதப்பர் தனது அமைச்சரிடம் தாழ்ந்த குரலில் “அமைச்சரே அங்கு இஸ்லாமிய மதபிரச்சாரமா நடைப்பெருகிறது? திருவண்ணாமலையார் கோவில் சத்திரத்திலா?.

அமைச்சர் தாழ்ந்த குரலில் கூறினார், ” இல்லை அரசே யாரோ ஒரு சிறுவர் உரத்த குரலில் மெய்ஞானம் பேசுகிறார்.

இஸ்லாத்தின் வேதநூலான குர்ஆனின் வசனங்கள் பேசும் வினோதனமான அந்த குரல் யாருடையது? அரசர் ஆச்சரியத்துடன் கூட்டத்தை ஆராய முற்ப்பட்டப்போது கூட்டத்தின் நடுவாய் ஒரு பாறையின் மீது பச்சை தலைபாகையும் வெள்ளை சட்டையும் சராயும் அணிந்து தெய்வீகக்களையுடன் நின்றிருந்த பதினான்கு வயது பாலகரின் முகம் மன்னரை திகைப்புக்குள்ளாக்கியது.

பாலகர் ஹழ்ரத் நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீது ஆண்டகையின் பேரர் பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்களின் குரல் சிற்பியின் உளி ஓசை போல வார்த்தைகளை செதுக்கி ஒலி எழுப்பி கொண்டிருந்தது.

“நண்பர்களே! உங்களுக்குள்ளிருக்கும் நான் என்பதை அறிந்து கொள்ள முயலுங்கள். அரபகத்தில் தோன்றிய எங்கள் நபிகளார்(ஸல்)அவர்கள் தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தான் – மன் அரப நப்ஸஹு ஃபகத் அரப ரப்பஹு என கூறியுள்ளார்கள்.

“நண்பர்களே! தன்னை பற்றிய அறிவுதான் மனிதர்களுக்கு கை கொடுக்கும். உலகசுகமெல்லாம் மரணமென்னும் மண்வீட்டின் வாசலில் ஒன்றுமில்லாமல் போய்விடும். உலகின் கவனத்திலிருந்து விழித்தெழுங்கள் மறுமையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

“நண்பர்களே! மரணமென்னும் இருள் சூழும் முன்னர் ஞானமென்னும் ஒலி வீட்டுக்குள் வந்து புகுந்து கொள்ளுங்கள். உங்களை இறைவனின் பெயரால் எச்சரிக்கிறேன். உலக இச்சைகளின் நச்சரிப்புக்கு இறையாகி நாசமாகி போகுமுன் இறைவன் முன் அழியா நிலையடைந்து நித்திய அமைதியில் நிலைக்கொள்ளுங்கள்.

ஹழ்ரத் பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்கள் திடீரென ஒரு பாடல் படித்தார்கள்.

பால பருவத்தில் பொழுதும் விளையாட்டு
பருவம் வந்தாலோ மங்கைமேல் காதல்
காலன் வரும் முதுமையில் கவலைகள் கோடி
கடவுளை எப்போதுநீ கண்டுகொள்ளப் போகிறாய்?”

ஆகா! இவர் நாகூர் எஜமான் காதிர் ஒலி நாயகத்தின் பேரரோ! ஆகா! அதே அருள் முகம் ஒளி சிந்தும் கண்கள்.

அரசர் அச்சுதப்பர் உள்ளம் புல்லரித்தது.