தோள் கொடுத்த துாய நபி

Prophet_Muhammed_Baqi_netsufi

மக்கமாநகரின் வெற்றிக்குப்பின்னர் மதினத்து மாநபியாம் மாதவமாமணியாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘அல்லாஹ்வின் துாதரே.. நான் ஒரு ஏழை, எனக்கு இருக்க இடமில்லை’ என முறையிட்டு நின்றார்.

நபி (ஸல்) அவர்கள், அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள். ‘இதோ இந்த இடத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்’ என ஓரிடத்தை சுட்டிக்காட்டினார்கள். கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை, அந்த ஏழைமனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்பமுனைந்த போது மண்குழைத்துக் கொடுத்தார்கள், மண்பதையை வாழ்விக்க வந்த மாநபி(ஸல்) அவர்கள்.

சுவர் எழுப்பியவுடன் வீட்டின் மேல்முகடை அமைக்க முனைந்தார் அந்த தோழர், அது உயரமாக இருந்ததால் அவருக்கு எட்டவில்லை.
இதனைக்கண்ட காத்தமுன்னபிய்யீன் (ஸல்) அவர்கள், ‘நண்பரே.. நான்கீழே அமர்ந்து கொள்கிறேன் நீர் என்தோள்மீது ஏறி முகடு அமைத்துக்கொள்ளும்’ என்றார்கள்.

அண்ணலரின் மொழிகேட்டு அதிர்ந்துபோன அத்தோழர் ‘என்ன தங்களின் புனிதமிகு தோள்களின் மீது நான் ஏறி என் வீட்டிற்கு முகடு அமைத்துக்கொள்வதா..? எனக்கு வீடே வேண்டாம்’ என்று கண்களில் நீர்ததும்ப கூறி விலகி நடக்கலானார். நபி(ஸல்) அவர்கள் அவரை சமாதானம் செய்து தம் புனித தோள்களில் ஏறி முகடு அமைத்துக்கொள்ள உதவினார்கள்.

அந்த ஏழையோ வேண்டாவெறுப்புடன் கண்ணீர் சிந்தியவாறு அமைதியே உருவாய் இன்முகத்துடன் அமர்ந்துகொண்ட நபியின் தோள் மீதேறி முகடு அமைத்தார்.

நுாலுக்கு நன்றி – அண்ணலாரின் வாழ்க்கையில் அரிய நிகழ்ச்சிகள்.