நாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு

தெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் நானிலம் போற்றிடும் நாகூரில் கொலுவீற்று ஆன்மீக அரசாலும் நம் கருணைக்கடல் கஞ்சஷவாயி காதிர்ஒலி நாயகத்தின் கீர்த்திமிக்க தர்கா எனும் திருப்பள்ளிக்கோட்டையின் வனப்பையும் அமைப்பையும்போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லையென்று உலகம் சுற்றிய அறிஞர்கள்பலர் புகழ்ந்திருக்கின்றனர்.

nagore-minaret copy
அனுதினமும் அண்ணலரின் வாசலில் ஆயிரக்கணக்கானோர் சாதிசமய பேதமின்றி உயர்வு தாழ்வு என்ற பிரிவுமின்றி தங்களது மனம்போல் அருள்பெற்று செல்லும் ஆண்டகையின் தர்கா வளாகம்,
1. வடக்கே தலைமாட்டு வாசல்,
2. மேற்கே அலங்கார வாசல்,
3. தெற்கே கால்மாட்டு வாசல்,
4. கிழக்கே கிழக்கு வாசல்
என்ற நான்கு வாயில்களைக்கொண்டு சுமார் 1,94,790 சதுர அடியில் ஒரு மகா சக்கரவர்த்தியின் அரண்மனைபோல் கம்பீரத்தோற்றத்தோடு காட்சியளிக்கிறது.
நாவலரும் பாவலரும் புகழ்ந்துபாடும் நாகூர் திருத்தலத்தின் கம்பீர அடையாளமாய் நின்று காண்போரை பிரமிக்க வைக்கும் தர்காவின் நெடிதோங்கிய ஐந்து மினாராக்களின் வரலாறு நாம் அனைவரும் அவசியம் அறியவேண்டிய ஒன்று.
முதல் மினாரா-
செஞ்சி நகர்கண்ட வணிகப் பெருந்தகையாம் இபுறாஹிம் கான் என்பவர் தமது காரியங்களில் வெற்றயும் வணிகத்தில் விருத்தியும் கண்டால் ஒரு மினாராவும் மண்டபமும் கட்டுவதாக நாகூர் நாயகத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டார். அவரது எண்ணம் நிறைவேறியதும் மீறான் ராவுத்தர், மதாறு ராவுத்தர் ஆகிய இருவரை மினாரா எழுப்ப தேவையான பொருட்செல்வத்துடன் நாகூருக்கு அனுப்பினார்.

அப்போது நாகூர் நாயகத்தின் மூன்றாவது பேரரான சுல்தான் கபீர் நாயகத்தின் மைந்தர் சுல்தான் அப்துல் காதிர் நாயகத்திடம் அனுமதி பெற்று தென்மேற்கு மூலையில் மினாராவை எழுப்பினார்கள். அதற்கு ‘சாஹிபு மினாரா’ என்று பெயர். அதன்பின் ஒரு மண்டபம் கட்டப்பட்டது. இது நாயகமவர்களது மறைவின் எழுபத்தேழாம் (77) வருடத்தில் (கி.பி 1635) பூர்த்தியானது. இதன் உயரம் 77 அடி, தர்காவின் நடுவில் கட்டப்பட்டதால் இதற்கு ‘நடுமண்டபம்’ என்று பெயர்.

இரண்டாவது மினாரா-

நாகையில் நல்ல சையிது மரைக்காயர் என்ற ஒரு கப்பல் ஏற்றுமதி வியாபாரி இருந்தார். அவரது பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தர்கா முன் எல்லையின் வடமேற்கில் ஒரு மினாரா கட்டினார். இது நாயகமவர்கள் மறைந்த நுாற்றிருபத்திரண்டாம் (122) வருடம் (கி.பி 1680) கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு ‘தலைமாட்டு மினாரா’ என்று பெயர். இதன் உயரம் 93 ½ அடி.

மூன்றாவது மினாரா-

நாகை நல்ல சையிது மரைக்காயர் மலாக்காவிலிருந்த தம் நண்பர் பீர் நயினார் என்பவருக்கு கடிதம் எழுதி மூன்றாவது மினாராவை கட்டுவித்தார். வடகிழக்கு மூலையில் கட்டப்பட்ட இந்த மினாரா நாயகமவர்கள் மறைந்த நுாற்றிமுப்பத்திரெண்டாம் (132) வருடம் (கி.பி 1690) முடிவு பெற்றது. இன்று அதற்கு ‘முதுபக் மினாரா’ என்று பெயர். இதன் உயரம் தொண்ணுாற்று மூன்றேகால் (93 ¼ ) அடி.

நான்காவது மினாரா-

நான்காவது மினாரா பரங்கிப்பேட்டையில் நீதிபதியாக இருந்த தாவூத்கான் என்பவரால் கட்டப்பட்டது. தர்கா எல்லையின் தென்கிழக்குப் புறமாகக் கட்டப்பட்ட இந்த மினாரா நாயகமவர்களது மறைவுக்கு நுாற்றைம்பதாம் (150) வருடத்தில் (கி.பி 1708) முடிவு பெற்றது. அதைச் சுற்றிலும் முதலில் ஓட்டுக்கூரை போடப்பட்டிருந்ததால் ‘ஓட்டு மினாரா’ என்று பெயர் பெற்றது பின்னர் மினாராவின் மேல்பாகம் சீராகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 80 அடி.

ஐந்தாவது மினாரா-

‘எனக்கு ஒரு மகன் பிறந்தால், நான்கு மினாராக்களைவிட உயரமாக ஐந்தாவது மினாராவை கட்டுகிறேன். ஒரு பெருங்கிராமத்தையும் மானியமாகத் தருகிறேன்’ என்று அப்போது தஞ்சையை ஆண்ட பிரதாப்சிங் என்னும் மன்னர் நாகூர் நாயகமவர்களிடம் மன்றாடினார். அடுத்த வருடம் மன்னருக்கு ஆண்குழந்தை பிறந்தது. மன்னர் தன் வேண்டுதல் நிறைவேறவே அகமகிழ்ந்து தர்கா எல்லைக்கு வெளிப்புறம் ஒரு மினாரா கட்ட உத்தரவிட்டார்.

நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து மினாராவை வானுயர எழுப்பினார்கள். மற்ற மினாராக்களைவிட இம்மினாரா உயரமானதால் இது ‘பெரிய மினாரா’ என்று பெயர்பெற்றது. நாயகமவர்களது மறைவின் நுாற்றுத் தொண்ணுாற்றொன்பதாம் வருடம் (கி.பி 1757) அம்மினாரா பூர்த்தியானது, இதன் உயரம் 131 அடி. மன்னர் தன் மைந்தன் துளசியுடன் திருச்சிந்நிதிக்கு வந்து வணங்கி ‘இளங்கடம்பனுார்’ என்னும் கிராமத்தையும் மானியமாகக் கொடுத்தார்.

இப்படி நாகூர் தர்கா பலரால் சில நுாற்றாண்டு காலமாகக் கட்டப்பட்டிருந்தாலும் தற்போது நாயகத்தின் வளாகத்தில் அமைந்திருக்கும் மண்டபங்களின் எழிலையும், மினாராக்களின் அழகையும் பார்க்கும்போது பல கைதேர்ந்த கட்டிட அமைப்பாளர்களும் பொறியியல் விற்பன்னர்களும் சேர்ந்து ஒரே சமயத்தில் கட்டிட அமைப்பும் கலையமைப்பும் வடிவமைத்து கட்டியதுபோலவே இருப்பது நாயகமவர்களது சக்தியே அன்றி வேறல்ல என்பது தெளிவாகிறது.
அனுதினமும் அருள்வேண்டி பொருள்வேண்டி ஆயிரக்கணக்கானோர் கூடிக்கலையும் நாகூர் தர்கா எனும் அருட் ஸ்தலத்தில் அற்புதங்களுக்கு பஞ்சமே இல்லை.

நாகூரை நாடியவருக்கு ஜெயமுண்டு நாடாதாருக்கு ஒன்றுமில்லை என்பதற்கு, தற்போதைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் வேண்டுதல் நிறைவேறி தர்கா குளத்தில் 40 அடியில் கட்டுவித்த புதிய ஆறாவது மினாராவே சாட்சி பகற்கிறது.

தகவல் உதவி – M.H.ஹாஜா சம்சுத்தீன் சாஹிப், கலீஃபத்துல் காதிரி,
நாகூர் தர்கா ஆதீனம்,
தலைவர் – நாகூர் நாயகம் நேசப் பாசறை.
Ph.- 94439 85250