நாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம்

குவாலியர் – பாழடைந்த பள்ளிவாசல் முற்றத்தில் நிசப்தத்தின் நடுவில் இளவல் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் பஜ்ர் தொழுகையை முடித்து கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்கள். அவர்களின் எண்ணங்கள் ஜவ்ன்பூரில் காட்சி தந்த மஜ்தூப் ஹழ்ரத் கதிருத்தீன் கத்தாலி(ரலி)அவர்களின் மீது கவிழ்ந்தது

மஜ்தூப் அவர்களின் போதனையான பார்வையில் பார்க்கும் முராகபா முஷாஹிதா என்னும் தியானத்தில் மனம் லயிக்கத் தொடங்கியது.

ஆம் சமாதி நிலையில் ஒன்று படமுனைந்த இளவல் அண்ணல் பாதுஷா நாயகம் அவர்கள் தன்முன் ஆளவரம் கேட்டு திடுகிட்டு விழித்தார்கள். விசித்திரத்தின் விசித்திரமாய் மறைந்த மகான் கதிருத்தீன் அவர்கள் கண் எதிரில் ஆன்ம ஜோதியாய் காட்சி தந்தார்கள்.

நொடிப் பொழுதில் அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த அகமிய கலிமாவின் அர்த்தங்கள் இளவல் அகத்தில் ஒவ்வொன்றாய் பதிந்தன.

அத்துரியக் காட்சியில் மனம் லயித்து தன்னில் தானாகி இளவல் பாதுஷா நாயகம் மன ஆழத்தில் ஓய்ந்தபோது உட்பார்வையில் சூக்கும உலகம் விரியத் தொடங்கியது. ஹூ என்னும் பிரணவ தொனியில் தான் உருவமற்ற உருவாய் ஆன்மாவாய் ஒடுங்க கண்டார்கள்.

அதோ தொடக்கத்தின் தொடக்கம் இல்லாமையிலிருந்து இருத்தலின் உற்பவம். இளவல் அப்துல் காதிர்(ரலி)அவர்களின் தியான வாசலில் பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரையான அனுபவங்கள் தொடர்ந்தன.

இருத்தல் உணர்வாக பரிணமித்த உலகமே பௌதீக அணு. அணுவின் பெருக்கமே அண்டம். அண்டத்தின் சிதறல் ஆகாசம், ஆகாசச் சிதறல்கள் விண்மீன் கூட்டம் சிதறல்களின் சிறு தூசி பூமி.

இருத்தலிருந்தது உணர்தலின் பரிணாமத்தில் பிறந்த பூமி, மண், நீர், நெருப்பு, காற்று, வானம். மனிதன் புனிதன்.

இளவல் பாதுஷா நாயகம் அவர்கள் தியானத்திலிருந்து கண்விழித்து மெல்ல எழுந்து பள்ளிவாசலின் வெளிதிண்ணைக்கு வந்தார்கள். வேகமாகப் பேய்து கொண்டிருந்த மழையை கையிலேந்தி இரண்டு மடக்கு வானின் அமுதத்தை பருகியதும் அவர்களின் உடலெங்கும் புத்துணர்ச்சி பரவியது உணர்ந்தார்கள் “நான் எனும் நீ.”