முஹ்யித்தீன் ஆண்டகையின் அற்புதமான சொற்பொழிவு

பாராளும் ஞானி பரமார்த்த ஜோதி பாக்தாத்தின் இராஜரிஷி கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) ஆண்டகையின் அற்புதமான சொற்பொழிவுகளிலிருந்து சிறுதொகுதிகள்…

சொற்பொழிவு கேட்க வரும்போது

என் அன்பிற்குரிய தோழர்களே என்னிடம் வருகிறீர்கள். என் பேச்சை கேட்டு உருகி கண்ணீர் வடிக்கிறீர்கள். ஆனால் ஏழைகள் உங்களிடம் வரும்போது மட்டும் உங்கள் நெஞ்சம் உருகாதிருப்பதேன்? இதிலிருந்து தெரிவதென்ன? என்முன் நீங்கள் செவி சாய்ப்பதும் மனமுருகி கண்ணீர் விடுப்பதும் அல்லாஹ்வை மட்டும் முன்னிட்டன்று என் பேச்சை செவி சாய்ப்பதென்றால் முதலில் உள்ளத்தால் கேட்க வேண்டும். மனதில் உணர வேண்டும். நற்கருமங்களில் ஈடுபட வேண்டும். என்னிடம் வாருங்கள், உங்களுடைய அறிவு, அனுஷ்டானம், சொத்து சுகம் குடும்பம் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு என்னிடம் வாருங்கள். என்முன் அல்லாஹ் அல்லாத சகலவற்றையும் துறந்து நிர்வாணிகளாய் நிற்க வேண்டும். அப்போது தான் இறைவன் உங்கள் மீது தன் சமீபத்துவம் எனும் உடைகளை அணிவிப்பான். இவ்விதம் என்னிடம் வந்து என் வாயிலாக சீர்திருத்தம் பெறுவீர்களாயின் கவலையின்றி காலையில் எழுந்து கவலையின்றி மாலை கூடு திரும்பும் பறவைகளைப்போல் ஆகிவிடுவீர்கள்.

பொறுமை

மகனே பொறுமை எனும் தலையணையின் மீது தலை வைத்தவனாக தெய்வ சித்தத்திற்கு ஒத்த வழியாக இருத்தல் எனும் போர்வையை போர்த்தியவனாக, தெய்வ நாட்டம் திறப்பதை எதிர்பார்த்தவனாக, வணங்கியவனாக தக்தீரின்(விதிவசத்தின்) பாதத்தினடியே உறங்கியவனாக இருந்து வா. அவ்விதம் இருப்பின் தக்தீரை நிர்ணயிப்பவன் கருணா மாரியையும், பேறுகளையும் உன் மனதிற்கு அடங்காத அளவில் பொழிந்தருளுவான். உண்மையான வீரம் யாதெனில் நேரமெல்லாம் பொறுமையாய் இருப்பதாகும்.

‘நிச்சயமாக அல்லாஹ் அவன் உதவியைக் கொண்டு பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’, எனவே அல்லாஹ்வுடன் பொறுமை உடையவர்களாகுங்கள்.[/toggle]

முக்தி மார்க்கம்

என் சங்கநாதத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து நடந்தால் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். வேர் பலப்பட்டால்தான் மரம் காய்க்கும். நானோ என் ஷைகின் (குருவின்) கடும் சொற்களை செவிடன், ஊமை போன்று மௌனமாய் ஏற்றுக் கொண்டேன்.

அவரால் எனக்கு சம்பவித்த ஆபத்துகளைக் கூட பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டு அவரால் அளிக்கப்பெற்ற ஞானத்தால் என்னை துாய்மைப்படுத்திக்கொண்டேன்.

நீயோ ஷைகின்(குருவின்) சிட்சையால் பயனடைய விரும்புகிறாய். ஆனால், அவர் சொற்களை பொறுமையோடு செவிமடுப்பதில்லை. நன்மையோ, தீமையோ எதுவும் இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்ற உள்ள உறுதியோடு ஷைகின்(குருவின்) போதனையை ஏற்றுக் கொள்ளாதவரை உனக்கு வெற்றியில்லை.

உன் லோபத்தனமும் அசட்டையுமே உன் தோல்விக்கு பொறுப்பே தவிர உன் குரு அல்லர். கண்ணை மூடிக் கொண்டு ஷைகின்(குருவின்) சொல்படி நட முக்தி மார்க்கம் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published.