ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி) அவர்களின் மனமாற்றம்

வங்க நெடுங்கடலின் ஓரமாய் தெற்கிலிருந்து வடக்கு நொக்கி நடந்து கொண்டிருந்தார் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி).

திடீரென அவர் எழுப்பிய கூக்குரல் தொடுவானின் எல்லைவரை சென்று எதிரொலித்தது.

“எங்கு சென்றீகள் காதிர் ஒலி நாயகமே! தாதா ஷாஹுல் ஹமீது நாதரே! எங்குதான் மறைந்திருக்கிறீகள்?”

ஷாஹே யூசுப் தாதா நாயகத்தின் தலைச்சனாகிய மைந்தர் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்களின் குரல் நிமிடத்துக்கு நிமிடம் ஓங்கி ஒலித்தது.

“எனது பாட்டணாரே இறைவனின் குத்பாகிய இறை ஆட்சியாளரே! அறியா பாலப் பருவத்திலேயே என்னுள் இறைவனை அறிய வேண்டும் என்ற வேட்கைக்கு வித்திட்டவர்களே! தங்களை இழந்து அனாதை போல் அலையும் என்னை எங்கிருந்தாவது எட்டிப் பார்ப்பீர்களா?

என் ஆன்மா வருடித் தழுவும் தங்கள் திருப்பாதங்கள் எங்கு சென்றதோ? என் நினைவுகளின் வேதனைகளுக்கு விடிவே கிடையாதா?

“துருக்மினிஸ்தானின் காடுகளிருந்து இரவோடிரவாக இரண்டாயிரம் மைல் கடந்து மாணிக்கபூர் வரை தோழர்களையும் அழைத்துக் கொண்டு சாதனங்கள் ஏதும் இன்றி இராட்சதப் பறவைகளைப் போல வானில் பறந்து அற்புதம் புரிந்தீர்கள்!

நானூறு தோழர்களுக்கு முப்பது ஆண்டுகள் காலம் பஞ்சமின்றி கிஸ்தியில் அறுசுவை உணவை விளையச்செய்து பசியாற்றி வந்தீகள்!

“மன்னர் அச்சுதப்பரின் தந்தையை மரணத்திலிருந்து மீட்டு வந்து பல்லாண்டு காலம் வாழ வைத்தீர்கள். கடல் கொண்டு சென்ற பட்டணமாரி பரவதர்களை உயிரோடு மீட்டு கொடுத்தீகள்!

“கௌது முகியித்தீன் காரண வாரிசு நானே என்று சொல்லாலும் செயலாலும் இப்பாரெல்லாம் புகழ கராமத் என்னும் அற்புதங்கள் ஆற்றி மனுகுலத்துக்கு சேவை செய்தீர்கள்!

“அடியேன் நாவறண்டு கூப்பிடும் குரல் மட்டும் உங்களுக்கு கேட்கவில்லையா பெருமானே!

எம்பெருமான் முகியித்தீன் ஆண்டகை திருநாமத்தையும் ஏந்தல் காதிர் ஒலி நாதரையும் ஒருமைப்படுத்தி பாலகர் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்கள் குரலெழுப்பிய மறுகணம் அந்த கடற்கரை நடுங்கியது.

பாலகர் கண்ணெதிரே ஜகஜ்ஜோதியாய் தோன்றி நின்றார்கள் காருண்ய ஜோதி கருணைக்கடல், கன்ஜபக்ஸ் கன்ஜ்சவாயி குத்புஸ் ஸமான் குத்புல் அக்தாப் ஃபர்துல் அஹ்பாப்! ஷாஹுல் ஹமீது பாதுஷா காதிர் ஒலி ஆண்டகை நாயகம் அவர்கள் அருமை பேரர் பாபா ஃபக்ருத்தீனின் சிரசை தன் மார்பில் அணைத்து பரிவுடன் தடவி ஆசிர்வதித்து,

“மைந்தரே நான் அழியாமல் இருக்கிறேன் என்ற உண்மையை மூன்றாண்டுகளுக்கு முன் சடதத்துவ உடலை துறந்த மூன்றாம் நாளில் உமது தந்தையாரின் சலாத்துக்கு மண்ணறையிலிருந்து பதில் கூறி தெளிவு படுத்திவிட்டேனே!
“எதற்காக நீர் பதறுகிறீர்?

” மைந்தரே அறிந்து கொள்ளும், இறைவனை அறிந்து கொள்ள ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மாவை அறிய நீர்… மைந்தரே நீர்….

“மைந்தரே சுல்தான் இப்றாஹீம் இப்னு அத்ஹம் அவர்களின் வரலாறு உமக்கு கூறியிருக்கிறேனே நீர் மறந்து விட்டீரா?
அடுத்த கணம் எஜமான் காதிர் ஒலி(ரலி)அவர்கள் மறைந்து போனார்கள், அரசர் ஞானியின் வரலாறு இப்போது பேரரின் கண் முன் ஒளி ஒலி காட்சியாய் விரிந்தது.

நிஜ கோலமாய் தன்முன் தோன்றி மறைந்த பாட்டனார் எஜமான் காதிர் ஒலி ராயகம், உயிரோடிருக்கும் போது முன்னர் கூறிய வரலாறு நினைவில் கொண்டுவந்து பதினான்கு வயது பாலகர் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்கள் ஆழிய சிந்தனை கடலில் மூழ்கினார்கள்!
மறுநாள் அதிகாலை “பாபா ஃபக்ருத்தீன் எங்கே? எங்கே? என்று நாகூர் கிராம மக்கள் வலை போட்டு தேடி கொண்டிருந்தார்கள்.
நெஞ்சில் ஞானதீபம் கொண்டு ஹழ்ரத் பாபா எங்கோ தூரதூரம் போய்க் கொண்டிருந்தார்கள் ஹழ்ரத் பாபா ஃ பக்ருத்தீன் (ரலி)அவர்கள்.