மாபெரும் ஞானி ஹஜ்ரத் முஹம்மது ஹுசைன் சாஹிப் நாகூரி

திக்குத் திகந்தமும் கொண்டாடும் நாகூர் பதியில் ஹஜரத் காதிர் ஒலி ஆண்டகையின் ஆன்ம குமாரர் ஹழ்ரத் ஷாஹே தௌலத் செய்யது முஹம்மது யூசுப் தாதாவின் மைந்தர் செய்யது சுல்தான் கபீர் நாயகத்தின் குலவழியில் ‘அவ்ளாதுல் அத்ஹார்‘ என்னும் பரிசுத்த சந்ததியில் அஷ்ஷெய்க் காமில் எம் .ஜி . முஹம்மது ஹுசைன் சாஹிப் ஆரிபுபில்லாஹ் அவர்கள் கி.பி.1929ம் ஆண்டு தோன்றினார்கள்.

ஆலிமும் சாயிரும் ஷெய்குல் மஷாயிக்குமாக விளங்கிய ஹாஜி. மு. குலாம் தஸ்தகீர் நானா சாஹிபு அவர்களும்,உம்மா சுலைமான் நாச்சியார் அவர்களும் ஈன்றெடுத்த அருந்தவப் புதல்வரான ஷெய்குனா அவர்கள், நாகூர் கௌதியா முஸ்லீம் பாட சாலையிலும்,காதிரியா மதரசாவிலும் பயின்று உலக மார்க்க கல்விகளை கற்று தேர்ந்தார்கள்.

தந்தையாரிடம் ஆன்மீக போதனை பெற்று பல ஆண்டு காலம் அரிய தவ அனுஷ்டானங்களை மேற்கொண்டு அவர்களின் திருக் கரத்தால் கிர்கா கிலாஃபத் அளிக்கப்பட்டு காதிரியா ஷத்தரியா சிஸ்தியா ஆகிய தரீக்காக்களின் கலீஃபாவாக நியமிக்கப் பட்டார்கள்.

தந்தையார் உத்தரவின்படி கேரளாவிலுள்ள கோட்டயத்தில் சமாதி கொண்டிலங்கும் செய்யதினா சுலைமானுல்லாஷாஹ் காதிரி ரிஃபாயீ ஒலியுல்லாவின் கான்காவில் சில ஆண்டுகள் தங்கி ரிஃபாயீ தரீக்கத்தின் அஹ்மதியா பிரிவில் சுலுக்கே ரிஃபாயீ என்னும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்கள்.

அப்பெரியாரின் மறைவுக்குப் பின்னர் பொட்டல்புதூரில் வாழ்ந்து சிறந்த அண்ணாரின் மைந்தர் செய்யதினா சமீமுல்லாஷா காதிரி ரிஃபாயீ அவர்களிடமிருந்து ரிபாயீ தரீகத்தின் கிலாபத்தை பெற்றார்கள்.

ஷெய்குனா அவர்கள் தமது அஸ்மா தல்சமாத் செயல்பாடுகளின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியுண்டாக்கி மனம் மற்றும் உடல் பிணிகளை தீர்த்து வைத்து ஹஜரத் காதிர் ஒலி நாயகத்தின் கன்ஜுல் கராமத் என்னும் அற்புதத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழகம், கேரளா, மலேசியா நாடுகளில் நானூறுக்கும் மேற்பட்ட முரீதின்களுக்கு ஞானதீட்சை என்னும் பைஅத் வழங்கியுள்ளார்கள்.

தகுதி மிக்க ஏழு பேர் ஷெய்குனாவின் கலீபாவாக நியமனம் பெற்றுள்ளனர்.

அரபு, தமிழ், உருது மொழிகளில் அரிய நூலாராய்ச்சியில் ஈடுபட்டு

  • பத்ர் சஹாபாக்கள்,
  • அற்புத ஜோதி ஆரிஃப் நாயகம்,
  • காருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம்,
  • பேரின்ப ஜோதி காஜா முய்னுதீன் சிஸ்தி அஜ்மீரி,
  • சன்மார்க்க ஜோதி ஏர்வாடி இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லாஹ்,
  • மனம்குளிர்ந்த மாதரசி நாகூர் சுல்தான் பீபி அம்மா

முதலிய வரலாற்று நூல்களை தொகுத்து, எழுதுவித்து, வெளியிட்டு தமிழ் முஸ்லீம் எழுத்துலகில் அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் .

மஹான் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு இறப்பெய்தினார்கள். அவர்களின் மஜார் என்னும் புனித சமாதி நாகூர் தர்கா ஷரீஃப் மையவாடியில் அமைந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *